Monday, March 13, 2017

பவளப்பாறைகளின் அழிவும், மன்னார் மீன்பிடியின் மந்தமும்

பவளப்பாறைகளின் அழிவும், மன்னார் மீன்பிடியின் மந்தமும்     அது மீன்பிடி காலத்தின் உச்சநேரம்... மீனவர்கள் வலையை விரித்துவைத்து சுமார் 4 மணி நேரம் காத்திருந்தார்கள். ஆனால், வலையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மீன்கள் சிக்கவில்லை. அந்தப் பயணம் அவர்களுக்கு மிகுந்த நஷ்டம் தரும் பயணமாகத்தான் அமைந்தது. அப்போது அந்த மீனவர்கள், “என்னான்னு தெரியல தம்பி... இப்பல்லாம் எதிர்பார்க்குற அளவு மீன் கிடைக்கிறதில்ல...
கடல் மாதாவுக்கு எங்கமேல என்ன கோபம்னு தெரியல” என்றார். அப்போது கடல் மாதா ஏன் கடலின் மைந்தர்கள் மீது கோபமாக இருந்தாள் என்று தெரியவில்லை.
ஆனால், சில ஆண்டுகளுக்கு பின்தான் புரிந்தது... கடல் மாதாவின் செல்லப் பிள்ளைகளான பவளப் பாறைகளின் படுகொலைதான் அந்தக் கோபத்துக்குக் காரணம் என்று.
“நுகர்வு வெறியும், பவளப் பாறைகளின் அழிவும்”
பிரிட்ஜோபவளப் பாறைகள் என்றதும் ஏதோ ஒரு வகையான பாறைகள் என்று புரிந்து கொள்ளவேண்டாம். இவை குழிமெல்லுடலிகள் என்ற வகையைச் சேர்ந்த உயிரினங்கள்.
இவை கடலின் ஆழமில்லாத பகுதிகளில் வசிக்கும். ஒரு கடலில் பவளப்பாறைகள் அதிகமாக இருந்தால், அந்த கடல் பகுதி வளமாக இருக்கிறது என்று அர்த்தம். மீன்கள் அதிகளவு இருக்கின்றன என்று பொருள்.
அந்த பவளப் பாறைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், ஆறு கடலில் கலக்க வேண்டும். வெப்பநிலை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
அதாவது, வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்தால், அந்தவாயு கடல் நீரில் கரையும் அளவும் அதிகரிக்கும். இதனால் கடல் நீர் அமிலத்தன்மை உடையதாக மாறி பவளப் பாறைகளைப் பாதிக்கும். இது பாதித்தால், அந்தப் பகுதியின் கடல் வளமும் பாதிப்படையும்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, மத்திய-மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால், ஆற்று நீர் தேவையில்லாமல் கடலில் கலக்கிறது என்ற அறிவியல்தனமற்ற கேள்விகளால், குறிப்பாக தனி மனிதனின் நுகர்வு வெறியால், அதற்கான வரைமுறையற்ற உற்பத்தியால், வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்து, பவளப் பாறைகளின் அழிவுக்கு காரணமாக அமைந்து விட்டது.
மன்னார் வளைகுடா பகுதியில், கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்ற அளவு 0.1 முதல் 0.90 வரை. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் இந்தப் பகுதியில் 2.26 செல்ஸியஸ் வரை வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டு, ஒரு காலத்தில் பவளப் பாறைகளின் சொர்க்கபுரியாக இருந்த மன்னார் வளைகுடாவின் கடல் சூழலியலே சிதைந்திருக்கிறது.
“பவளப் பாறையும்.. சுதும்பு மீனும்”
“சரி. இது அறிவியல். எங்களுக்கு புரிகிறது. பவளப் பாறைகளின் அழிவுக்கும், பிரிட்ஜோக்களின் மரணங்களுக்கும் என்ன தொடர்பு...?”
"இருக்கிறது. நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ராமேஸ்வரம் கடல் பகுதிக்கும், இலங்கைக் கடல் எல்லைக்கும் இடையே உள்ள தூரம் 12 நாட்டிக்கல் மைல்தான். அதில் 3 நாட்டிக்கல் மைல் நாட்டுப் படகுகளுக்கானது.
7 நாட்டிக்கல் மைல்களுக்கு பாறைகள் மட்டுமே படர்ந்திருக்கும். ஒருகாலத்தில் இந்த பகுதியிலேயே டன் கணக்கில் சுதும்பு மீன் எனப்படும் ஒருவகை மீன்கள் ஏராளமாக கிடைத்து வந்தன. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை இந்த வகை மீன்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தன.
ஆனால், இப்போது இந்தப் பகுதியில் சுதும்பு மீன் கிடைப்பதே அரிதாகி விட்டது.
சுதும்பு மீன் வெறும் எடுத்துக்காட்டுதான். இதே நிலைதான் வாழை, அயலை, சாளை போன்ற மீன் வகைகளுக்கும். இதனால் மீனவர்கள் கடலில் பல நாட்டிக்கல் மைல் தூரம் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக பயணிக்க வேண்டி இருக்கிறது.
கடல் நீரோட்டத்தில், காற்றில் சில சமயம் எல்லை மீறுவதும் நடக்கிறது. இதனால் மீனவர்கள் படுகொலைகளும் நடக்கின்றன".
“ஓ... அப்படியானால் பிரிட்ஜோ கடல் எல்லை மீறினார் என்கிறீர்களா...?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. "இல்லை... நிச்சயமாக இல்லை...
அவர்கள் மீன்பிடித்த கடற்பகுதி நம் எல்லைதான். அவர்கள் அலைபேசியிலிருந்து கரையை தொடர்பு கொண்டிருப்பதே இதற்குச் சான்று. நம் மீனவர்களை கொல்வதற்கு பின்னால் இன அரசியலும் இருக்கிறது. நான் மறுக்கவில்லை.
இங்கு நான் குறிப்பிட விழைவது.... ஏன் நம் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்ய வேண்டி இருக்கிறது என்பது குறித்தானது.
ஒருவேளை சூழலியல் சரியாக இருந்து, கடல் மாசு படாமல், பவளப் பாறைகள் சிதையாமல் இருந்திருந்தால், நம் மீனவர்கள் கடலில் வெகுதூரம் பயணிக்க வேண்டி இருந்திருக்காது. அதனால் இலங்கைப் படையினரால் நிகழும் மரணங்களும் நடக்காமல் இருந்திருக்கும்.
இனியாவது கடல் மீனவனின் பிரச்னையை... ஏதோ அவன் பிரச்னையாக கருதாமல்... நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தள்ளி நிற்காமல்..
நாம் நம் பிரச்னைகளை சரிவர செய்வோம்... சூழலியலைக் கெடுக்கும் அரசின் கொள்கைகளை மாற்ற அழுத்தமாகக் குரல் கொடுப்போம்.
இதற்கெல்லாம் மேலாக, நாம் நம் நுகர்வு வெறியைக் குறைப்போம். ஆம்...பாவத்தில் நம் பங்கில்லாமல் பார்த்துக் கொள்வோம்!

No comments:

Post a Comment